ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதிய பாரதத்தின் ஆரம்பம் !

வணக்கம், 

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம். ஒரு வழியாக பழைய பேப்பர் ஆரம்பித்து 25-ஆவது பதிவை போட்டாகிவிட்டது. ஏதோ, எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வந்து, நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டுமென்பது என் ஆசை.

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம். எப்போதும் என் வலைப்பூவில் சமூகம் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என நொட்டாரம் சொல்லியே எழுதி வைப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் நல்ல படியாக பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம். இன்றைய முக்கிய செய்தியை படிக்க கொஞ்சம் சந்தோஷமாகதான்  இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் புதுதில்லியின் முதல்வராகிறார்!

திரைப்படங்களில் வருவது போல போன ஆண்டின் இறுதியில் 'அம் ஆத்மி' கட்சி ஆரம்பித்து, இந்த ஆண்டில் இறுதியில் முதல்வராகிவிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, மக்கள் மனதிலேயே போராட்டம் நடத்தி, அவர்களின் நன்மதிப்பையும் பெற்று விட்டார். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், தேர்தலில் நின்று ஜெயிப்பது புதிதல்ல; பெரிதுமல்ல.

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரும் ,பக்கத்து தெலுங்கு தேசத்தில் என்.டி.ஆரும் இப்படிதான் கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே ஆட்சியை பிடித்தனர். ஆனால், சினிமாவில் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேல் கொ(கோ)டி கட்டி பறந்துவிட்டு, அந்த செல்வாக்கை வைத்தே கோட்டையை கைப்பற்றினார்கள்.

கேஜ்ரிவால் அப்படியல்ல. ஐ.ஐ.டி- யில் பொறியியல் படித்துவிட்டு, இந்திய வருவாய் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் நாட்டின் உயரிய விருதில் ஒன்றான "ராமன் மகசேசே" விருது,  ஏழை மக்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கொண்டு போய் சேர்த்தர்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியை துறந்த பின், விருதையும், பரிசு பணத்தையும் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்திற்கு கொடுத்துதவியவர். ஜன் லோக்பால் சட்டத்தின் அமலுக்காக போராட்டம் நடத்தியவரில் ஒருவர். 2011 அன்னா ஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். முதல்வர் பதவிக்கு இதை விட என்ன தகுதி தேவை ?

ஆனால் இன்றைய நாட்டு நடப்பில், பண பலம், அரசியல் பலம், சினிமா பலம் என எதுவும் இல்லாமல், மக்களின் மக்களாக இருந்த வேட்பாளர்களையே தேர்ந்தேடுத்து, தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டார். நேற்று (28-12-2013) தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவி பிரமாணம் ஏற்க வரும் போது மெட்ரோ ரயிலில் வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். "கவுன்சிலரே 'கான்டசா'-வில் பறக்கும் போது, சி.எம். ஆட்டோவில் வர்றார்.. இந்தியா முன்னேறிடிச்சு போலருக்கே..!!! "  - என்ற முதல்வன் வசனம்  நினைவில் வருகிறது.


முதல்வரான பிறகு பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணையே, அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்; மீறினால் வேலை பறிக்கப்படும் என்பதுதான். பாராட்டுதலுக்குரிய ஆணை தான். மேலும் இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பு போன்ற ஆணைகள் விரைவில் பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார். ஆணை போடப்பட்ட வேகத்தில் செயல்படுத்தினால் தேவலை என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ, இது ஒரு புதிய பாரதத்தின் விடியலுக்கான ஆரம்பமாகதான் தெரிகிறது!

ஒரு சின்ன வருத்தம், இது போன்ற நல்லதொரு  மாற்றம் நம்ம தமிழகத்தில் வரவில்லையே என்று தான். புது தில்லி மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சி நடத்திய விதத்தை கண்டு தாங்காமல் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். கேஜ்ரிவாலாவது கடைசி வரை மற்றவர்களை போல மாறாமல் இருந்தால் சரி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தனபாலன்!!!

Unknown சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி Suresh Kumar !!!!

விமல் ராஜ் சொன்னது…

நன்றி தனபாலன் அவர்களே !!!